கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமாருக்கு சிறந்த கல்வி நன்கொடையாளர் விருது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.
கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமாருக்கு சிறந்த கல்வி நன்கொடையாளர் விருதினை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழகம் முழுவதும் 'காபி வித் கல்வி அமைச்சர்' என்ற நிகழ்ச்சி மூலம் மாணவ-மாணவிகளை நேரில் சந்தித்து வருகிறார். இந்நிலையில் திருநெல்வேலியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடினார். மேலும், கல்விப்பணியில் சிறந்து விளங்கும் 4 மாவட்ட கல்வியாளர்களுக்கு அமைச்சர் விருதுகளை வழங்கினார்.
அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளாக கன்னியாகுமரி, நெல்லை ஆகிய இரு மாவட்டங்களில் (தென்தாமரைகுளம், லீபுரம், ஆரோக்கியபுரம், ஜேம்ஸ்டவுண், மயிலாடி, வாரியூர்) ஆகிய பள்ளிகளில் புதிய வகுப்பறைகள், கலையரங்கம் ஆகியவற்றை கட்டிக்கொடுத்து மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடம் நன்மதிப்பை பெற்றுள்ள கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமாருக்கு தென் மாவட்டங்களில் சிறந்த கல்வி நன்கொடையாளர் விருதினை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தென்மாவட்டங்களில் பி.டி.செல்வகுமாரின் கல்வி சேவைகளை நான் கேள்விப்பட்டுள்ளேன். சினிமா திரைப்பட தயாரிப்பாளராக செயல்பட்டு வரும் ஒருவர் மாணவ, மாணவிகளின் தேவையறிந்து கல்விப்பணியில் சேவையாற்றி வருவது மிகவும் பாராட்டுக்குரியது. அவருக்கு கல்வி நன்கொடையாளர் விருது பொருத்தமான ஒன்றாகும் என்றார்.
தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் மு.அப்பாவு பேசும்போது, பி.டி.செல்வகுமாரின் கல்வி சேவைகள் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. புலி திரைப்படத்தின் தயாரிப்பாளரான இவர் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் பள்ளிக்கூட கட்டடங்கள் கட்டி மாணவ, மாணவிகளுக்கு கல்வி சேவையாற்றி வருகிறார். எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் செயல்பட்டு வரும் இவரது சேவையை பெரிதும் பாராட்டுகிறேன். தங்கள் கல்வி சேவை மென்மேலும் தொடரவும் வாழ்த்துகிறேன் என்றார்.
இந்த விருது குறித்து பி.டி.செல்வகுமார் கூறியதாவது: தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் மு.அப்பாவு ஆகியோர் பங்கேற்ற விழாவில் சிறந்த கல்வி நன்கொடையாளர் விருது பெற்றது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் மாணவ, மாணவிகளுக்கு தொடர்ந்து கல்விப்பணியாற்ற இந்த விருது ஒரு உந்துதலாக அமையும். கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் வாழ்ந்த இந்த மண்ணில் நானும் கல்வி வளர்ச்சிக்காக பணி செய்வதில் மிகவும் பெருமை கொள்கிறேன் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் மற்றும் மாநில பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், கல்வியாளர்கள், மாணவ, மாணவியர், பெற்றோர்கள் பங்கேற்றனர்.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் என்.சரவணன்
No comments:
Post a Comment