வேடசந்தூர் அருகே கோட்டூரில் சிறுமியை நிலா பெண்ணாக பாவித்து 100 ஆண்டுகளுக்கும் மேலாக வினோத வழிபாடு நடத்தி வரும் கிராம மக்கள்
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள கோட்டூரில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்தன்று பவுர்ணமி நாளில் மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி யாராவது ஒரு சிறுமியை நிலா பெண்ணாக பாவித்து கிராம மக்கள் பாரம்பரியமாக வினோத வழிபாடு நடத்தி வருகின்றனர்.
இந்த ஆண்டு அந்த கிராமத்தில் யாழினி என்ற சிறுமி நிலா பெண்ணாக தேர்வு செய்யப்பட்டதையடுத்து யாழினியை கிராம பெண்கள் ஊர் எல்லையில் உள்ள சரளி மலைக்கு அழைத்துச் சென்று அங்கு சிறுமியை அமர வைத்து ஆவாரம் பூக்களை பறித்து மாலையாக தொடுத்து அணிவித்து அலங்கரித்தனர்.
இதைத் தொடர்ந்து ஆவாரம் பூக்கள் நிறைந்த கூடையை சிறுமியின் தலையில் வைத்து அழைத்து வந்த ஊர் மக்கள், தாரை தப்பட்டை முழங்க நிலா பெண்ணை வரவேற்றனர். இதையடுத்து நிலா பெண்ணை மாரியம்மன் கோவிலுக்கு அழைத்துச் சென்று அவரது தோழிகளுடன் அமர வைத்தனர். அங்கு ஆண்களும் பெண்களும் கும்மியடித்து, பாட்டுப் பாடி நிலா பெண்ணை சுற்றி வந்தனர். இந்நிலையில், மாசடச்சி அம்மன் கோவிலுக்கு நிலா பெண்ணை அழைத்து வந்து, அங்கு நிலா பெண்ணின் முறை மாமன்கள் ஒன்று சேர்ந்து பச்சை தென்னை ஓலையால் குடிசை அமைத்து அதில் நிலா பெண்ணை அமர வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து மாவிளக்கு எடுத்து வந்த பெண்கள், குடிசையில் இருந்த நிலா பெண்ணை வெளியே அழைத்து வந்தனர். ஆவாரம் பூ கூடையை தலையில் சுமந்து வந்த நிலா பெண், ஊர் எல்லையில் உள்ள கோவில் கிணற்றில் விளக்கேற்றினார். சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வினோத வழிபாட்டினை நடத்தி வருவதாக கிராம மக்கள் கூறினர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment