திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்துமேட்டில் கூலி தொழிலாளி பெண்ணிடம் ஸ்டேட் பேங்க் ஏ.டி.எம் மிஷினில் பணம் எடுத்துக்கொடுக்க உதவுவது போல் நடித்து ஏ.டி.எம் கார்டை எடுத்துச்சென்று அவரது கணக்கில் இருந்த 40,000 ரூபாய் பணத்தை திருடிய மர்ம நபருக்கு போலீசார் வலை வீச்சு.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள வள்ளிப்பட்டியை சேர்ந்தவர் அஞ்சலி, கூலித் தொழிலாளி, இவர் தனியார் வங்கி ஒன்றில் 40 ஆயிரம் ரூபாய் கடன் பெற்று இருந்தார். அந்தக் கடன் தொகை அஞ்சலியின் ஸ்டேட் பாங்க் வங்கி கணக்கில் வரவாகியது. இந்த நிலையில் இன்று பணத்தை எடுப்பதற்காக அஞ்சலி வேடசந்தூரில் கரூர் சாலையில் உள்ள ஸ்டேட் பேங்க் வங்கியின் முன்புறம் உள்ள ஸ்டேட் பேங்க் ஏ.டி.எம்-க்கு சென்றுள்ளார்.
அவருக்கு ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுக்க தெரியாததால் அங்கிருந்த வாலிபர் ஒருவரிடம் பணத்தை எடுத்து தருமாறு கூறி ஏ.டி.எம் கார்டை கொடுத்து, ரகசிய பின் நம்பரையும் சொல்லியுள்ளார். அப்போது ஏ.டி.எம் கார்டில் பணம் எடுக்க உதவுவது போல் நடித்த அந்த வாலிபர், ஓ.டி.பி எண் வந்திருக்கும் அதை வங்கிக்குள் சென்று வாங்கி வாருங்கள் என்று அஞ்சலியிடம் கூறியுள்ளார்.
விவரம் அறியாத அஞ்சலியும், கார்டை அவரிடமே கொடுத்துவிட்டு வங்கிக்குள் சென்று உள்ளார். பின்னர் மீண்டும் வெளியே வந்து பார்த்தபோது அந்த வாலிபர் அங்கிருந்து மாயமாக இருந்தார். இதனால் சந்தேகமடைந்த அஞ்சலி, வங்கிக்கு சென்று தனது கணக்கை சோதித்துப் பார்த்தபோது கணக்கில் இருந்த 40 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டது தெரியவந்தது. தனது படம் திருடப்பட்டதை அறிந்த அஞ்சலி வங்கியின் வாசலிலேயே கதறி அழுதார்.
அஞ்சலியிடம் ஏ.டி.எம் கார்டை ஏமாற்றி வாங்கிய அந்த வாலிபர் உடனடியாக வேறு ஏ.டி.எம்-க்கு சென்று 40 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்றுள்ளார், இது குறித்து அஞ்சலி வேடசந்தூர் போலீசில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் போலீசார் ஏ.டி.எம் மூலம் பணத்தை மோசடி செய்த வாலிபரை தேடி வருகின்றனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் வேடசந்தூர் மணிமாறன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment