திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட அளவில் நடைபெற்ற நிதி சார்ந்த வினாடி-வினா போட்டியில் வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டிக்கு தகுதிபெற்ற மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா அறிவுறுத்தலின்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் கனரா வங்கி முன்னோடி வங்கி சார்பில் மாணவ, மாணவிகளிடையே நிதி சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வினாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டன. முதற்கட்டமாக வட்டார அளவில் 15 வட்டாரங்களில் 03.07.2023 அன்று நடைபெற்ற போட்டிகளில் 98 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 196 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இதில் ஒவ்வொரு வட்டாரத்திலும் முதலிடம் பெற்ற ஒரு குழு (2 நபர்கள்) வீதம் 15 வட்டாரங்களில் முதலிடம் பெற்ற 15 குழுக்கள் (30 மாணவ, மாணவிகள்) மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாவட்ட அளவிலான வினாடி-வினா போட்டி திண்டுக்கல் – பழனி சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள வட்டார வள மைய அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சிபினா பாத்திமா மற்றும் தாண்டா ஆகியோர் கொண்ட குழு முதல் பரிசு பெற்று, மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவிகளை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில், ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா உதவிப் பொதுமேலாளர் ரமேஷ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அருணாச்சலம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment