வேடசந்தூர் அருகே 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற கமிஷன் தருவதாக கூறி ரூ.90 லட்சம் பணத்தை பறித்துச் சென்றவர் கைது
கரூர் மாவட்டம், ஆண்டாள் தெருவை சேர்ந்தவர் சக்திவேல். இவரின் நண்பர் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஷாஜகான்.
இந்த நிலையில் சக்திவேல், ஷாஜகானிடம் என்னிடம் 2000 ரூபாய் நோட்டுகள் ஒரு கோடிக்கு உள்ளது. அதனை 500 ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொடுத்தால் 10 லட்சம் கமிஷன் தருகிறேன் என்று கூறியுள்ளார்.
அதனைத்தொடர்ந்து ஷாஜகான் தனது நண்பர்களான கரூரைச் சேர்ந்த குணசேகரன், பரமத்தி வேலூரை சேர்ந்த ராஜசேகர், திருப்பூரை சேர்ந்த தங்கராஜ் ஆகியோருடன் சேர்ந்து, கரூரைச் சேர்ந்த தொழிலதிபர் சுரேஷ்குமார் என்பவரை அணுகியுள்ளனர்.
சுரேஷ்குமாரிடம்
500 ரூபாய் நோட்டுகளாக 90 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால், 2000 ரூபாய் நோட்டுகளாக ஒரு கோடி ரூபாய் கிடைக்கும். கமிஷன் தொகை 10 லட்சத்தை நாம் பிரித்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளனர்.
அதற்கு சுரேஷ்குமார் ஒத்துக்கொண்டதால், பணத்தை மாற்றி தருவதாக சக்திவேலிடம் கூறியுள்ளனர். அதற்கு சக்திவேல் எரியோடு அருகே உள்ள கொண்டம நாயக்கனூரில் உள்ள தன்னுடைய தோட்டத்திற்கு வாருங்கள். அங்கு வைத்து பணத்தை மாற்றிக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
அதனைத்தொடர்ந்து கடந்த மாதம் 26ம் தேதி சுரேஷ்குமாரை அழைத்துக் கொண்டு 90 லட்ச ரூபாய் பணத்துடன் அனைவரும் சக்திவேலின் தோட்டத்திற்கு சென்றுள்ளனர்.
அங்கு தனது கூட்டாளிகளுடன் இருந்த சக்திவேல் கத்தி மற்றும் அரிவாளை காட்டி அவர்களை மிரட்டி, 90 லட்சத்தை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.
இதுகுறித்து சுரேஷ்குமார் எரியோடு போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் 2000 ரூபாய் மாற்றுவதில் புரோக்கராக செயல்பட்ட ஷாஜகான், குணசேகரன், ராஜசேகர், தங்கராஜ் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதனைத் தொடர்ந்து சக்திவேலின் இரண்டாவது மனைவி சத்திய பிரியா, மற்றும் சக்திவேலின் கூட்டாளி தங்கராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
மேலும் பணத்தைப் பறித்துச் சென்ற சக்திவேல் மற்றும் கூட்டாளிகளை போலீசார் வலை வீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் பெங்களூரில் பதுங்கி இருந்த சக்திவேலை தனிப்படை போலீசார் இன்று சுற்றி வளைத்துப் பிடித்தனர்.
அதனைத்தொடர்ந்து சக்திவேலை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடமிருந்து பணம் ரூபாய் 46 லட்சம் மற்றும் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழக குரல் செய்திகளுக்காக வேடசந்தூர் மணிமாறன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment