திண்டுக்கல் மாவட்டம்
குஜிலியம்பாறை அருகே ராமகிரியில் அருள்மிகு கல்யாண நரசிங்கப் பெருமாள் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே ராமகிரியில் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு கல்யாண நரசிங்கப் பெருமாள் கோவில் உள்ளது. திருமண கோலத்தில் உள்ள நரசிங்க பெருமாளை வணங்கினால் திருமணத்தடை நீங்கும் என்பது இக்கோவிலின் தனிச்சிறப்பு.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இருந்துவரும் இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் தேரோட்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு பங்குனி மாத தேரோட்ட திருவிழா மார்ச் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனையடுத்து ஏப்ரல் 4-ம் தேதி திருக்கல்யாண உற்சவ விழா சிறப்பாக நடந்தது. இதில் முக்கிய நிகழ்ச்சியான கோவில் தேரோட்டம் இன்று நடந்தது. இதையொட்டி கோவில் சன்னிதானத்தில் இருந்து எம்பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய சாமி சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு திருத்தேரில் வைக்கப்பட்டது.
அதன்பின்னர் தேரோட்டம் தொடங்கியது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா கோஷம் எழுப்பியவாறு வடம்பிடித்து தேரை இழுத்துச் சென்றனர்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தேரடி வீதியில் உலா வந்த தேர் மீண்டும் கோவில் நிலைக்கு வந்து சேர்ந்தது. அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் தேரின் வடம் மற்றும் சங்கிலிக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment