ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த திண்டுக்கல் மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை பேராலயத்தில் பூமியின் நடுவே இருந்து இயேசு கிறிஸ்து உயிர்த்துஎழும் நிகழ்வும் சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது.
கடந்த 2000 ஆண்டுகளுக்கு முன்பு சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட இயேசு கிறிஸ்து மூன்றாவது நாளில் உயிர்த்து எழுந்த நிகழ்வினை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இயேசு சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட தினமான கடந்த 7ம் தேதி புனித வெள்ளியாக அனுசரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இயேசு உயிர்த்தெழுந்த 3வது நாளினை ஈஸ்டர் பண்டிகையாக இன்று 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த திண்டுக்கல் மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை பேராலயத்தில் நள்ளிரவில் ஈஸ்டர்தின சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இரவு 11 மணிக்கு துவங்கிய திருப்பலியில் புதிய நெருப்பு உண்டாக்கப்பட்டு திருப்பலியில் கலந்து கொண்ட அனைவரும் கைகளில் அந்த நெருப்பினை மெழுகுதிரிகளில் ஏந்தி பாஸ்கா திருவிழிப்பு ஜெப வழிபாடு நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு ஆலயத்தின் நடுவே அமைக்கப்பட்டு இருந்த பூமியின் நடுவே இருந்து மரித்த இயேசு உயிர்த்தெழும் காட்சி சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தது. இயேசு உயிர்த்தெழும்போது ஆலயத்தில் ஆலயமணி ஒலிக்க பெரும்திரளாக கூடியிருந்த அனைவரும் கரஒலி எழுப்பியும் வான வேடிக்கைகள் வெடித்தும் உற்சாகமாக கொண்டாடினர். மேலும், ஒருவருக்கொருவர் ஈஸ்டர் தின வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். இந்த ஈஸ்டர் தின சிறப்பு திருப்பலியை
மேட்டுப்பட்டி பங்குதந்தை செல்வராஜ் தலைமையில் உதவிபங்குத்தந்தை ஆரோக்கியம்,
அருள்தந்தையர்கள் அருமை சாமி, லாரன்ஸ், பீட்டர் ராஜ், ஆரோக்கியம் கப்புச்சின் சபை ஆகியோர் நிறைவேற்றினர்.
கிறிஸ்தவ மத நம்பிக்கையின் ஆணி வேராக கருதப்படும் இந்த ஈஸ்டர் தின சிறப்பு வழிபாட்டில் அருள்சகோதரிகள், அருள்சகோதரர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பங்கு இறை மக்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நள்ளிரவில் ஈஸ்டர் தின சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment