ஓயாத ஒத்தக்கண் ரயில்வே சுரங்க பாதையில் தேங்கும் மழைநீர் பிரச்சினை திண்டுக்கல்லை அடுத்த வேடப்பட்டிக்கு செல்லும் வழியில் ஒத்தக்கண் ரெயில்வே சுரங்கப்பாதை உள்ளது. இந்த சுரங்கப்பாதையை வேடப்பட்டி, யாகப்பன்பட்டி, வெள்ளோடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரிக்கும் இந்த சுரங்கப்பாதை வழியாகவும் செல்லலாம்.
இந்த நிலையில் மழைக்காலங்களில் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்குவதால் பாதை சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலைக்கு மாறியது. இதனை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். சுரங்கப்பாதை சீரமைக்கப்படாததால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நத்தம் சாலையில் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச்செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது. இந்த நிலையில் பொதுமக்களின் கோரிக்கை ஏற்று ரெயில்வே துறை உதவியுடன் சுரங்கப்பாதையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ரெயில்வே துறை மூலம் ரூ.20 லட்சமும், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.12 லட்சமும் நிதி ஒதுக்கப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுரங்கப்பாதை சீரமைப்பு பணிகள் தொடங்கியது.
அனைத்து பணிகளும் நிறைவடைந்து சுரங்கப்பாதை மார்ச் 19ம் தேதி மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. இதற்கான தொடக்க நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி தலைமை தாங்கி, ரிப்பன் வெட்டி சுரங்கப்பாதையை திறந்து வைத்தார். இந்நிலையில் இன்று திண்டுக்கல் சுற்று வட்டாரத்தில் பரவலாக சுமார் அரை மணி நேரம் வரை பலத்த மழை பெய்தது. இதில் வேடபட்டி ஒத்தக்கண் ரயில்வே சுரங்க பாதையில் மீண்டும் முழங்கால் அளவிற்கு மழைநீர் தேங்கி நின்றது. இதனால் பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகினர்.
முப்பத்தி இரண்டு லட்சம் ரூபாய் செலவில் சுரங்கப்பாதை பணிகள் நடைபெற்று நிலையில் மீண்டும் மழை நீர் தேங்கி நிற்பது அப்பகுதி மக்களுக்கு பெரிதும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஓயாத ஒத்தக்கண் ரயில்வே சுரங்க பாதையில் தேங்கும் மழைநீர் பிரச்சினையில் இன்று தேங்கிய மழைநீரால் இந்த திட்டம் மாநகராட்சிக்கு பெரும் இழப்புதான் என்று சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் ஆனந்தன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment